வேளாண் திட்டப்பணிகளை இணை இயக்குனர் ஆய்வு
வேளாண் திட்டப்பணிகளை இணை இயக்குனர் ஆய்வு
நயினார்கோவில்
நயினார்கோவில் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் அ.பனையூர் கிராமத்தில் கலைஞர் திட்டத்தின் கீழ் உள்ள தரிசு நில தொகுப்பினை ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சரஸ்வதி ஆய்வு செய்தார். இத்தொகுப்பில் சுமார் 14 ஏக்கர் பரப்பில் காட்டு கருவேல மரங்கள் அகற்றப்பட்டு சமன் செய்து உழவு செய்து எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் ஆழ்துளை கிணறு அமைக்க புவி நிலக்கூறு ஆய்வு முடிவடைந்துள்ளது. விரைவில் ஆழ்துளைக்கிணறு அமைக்குமாறு அறிவுறுத்தினார். பின்னர் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்களை வழங்கினார். அவர் பேசுகையில், நயினார் கோவில் வட்டாரத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தரிசு நிலங்களை சாகுபடி நிலமாக மாற்ற எக்டர் ஒன்றுக்கு ரூ.13,500 மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றி சிறுதானியங்கள், எள், பயறு வகைகள் பயிரிட கேட்டுக் கொண்டார்.பின்னர் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல் விளக்கம் மற்றும் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல் செயல் விளக்கப் பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் நயினார்கோவில் பானுப்பிரகாஷ், உதவி வேளாண்மை அலுவலர் ஆறுமுகம், உதவி தொழில் நுட்ப மேலாளர் இளையராஜா, அ.பனையூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.