பிரதம மந்திரியின் முன்னோடி கிராம முன்னேற்ற திட்டப்பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோர அனுமதி ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்
பிரதம மந்திரியின் முன்னோடி கிராம முன்னேற்ற திட்டப்பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோர அனுமதி வழங்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் மாவட்ட தலைவர் மாவோ தலைமையில் 13 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் பழனியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
பிரதம மந்திரியின் கிராம முன்னேற்ற திட்டம் 2021-22-ம் ஆண்டிற்கு 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 156 கிராமங்களில் இருந்து திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி 354 பணிகள் ரூ.3,120 லட்சம் மதிப்பில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை செயல்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால் ஒப்பந்தப்புள்ளி கோர நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளவாறு இந்த பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரும் அலுவலராக ஊராட்சி மன்ற தலைவர்களையே நியமனம் செய்து அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கடந்த ஓராண்டாக இத்திட்டத்திற்கான பணிகள் வீடு, வீடாக நேரடியாக சென்று ஒவ்வொரு குடும்பத்தின் தற்போதைய நிலைமையை கணக்கீடு செய்தது, அதனை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தது, எங்கள் கிராமத்திற்கு தேவையான பணிகளை தேர்வு செய்தது என அனைத்துமே ஊராட்சி மன்ற தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான செலவினமே ரூ.40 ஆயிரத்துக்கு மேல் ஆகியுள்ளது. எனவே மற்ற மாவட்டங்களில் இத்திட்ட பணிகள் செயல்பாட்டில் உள்ளவாறு ஒப்பந்தப்புள்ளி கோரும் அலுவலர், சம்பந்தப்பட்ட கிராம தலைவர்கள் என அனுமதி வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.