கோவில்பட்டியில் 2 இடங்களில் செல்போன் திருடிய வாலிபர் சிக்கினார்
கோவில்பட்டியில் 2 இடங்களில் செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்த கூசாலிபட்டி மேட்டுத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுரேஷ் (வயது 38). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அதிகாலையில் சிறுநீர் கழிக்க எழுந்திருந்த போது வீட்டிற்குள் இருந்த மர்ம நபர் ஒருவர், செல்போனை திருடிக் கொண்டு வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ெசல்ல முயன்றுள்ளார். சுரேஷ் கூச்சலிட்டதால், மர்ம நபர் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்தி வழக்கு செய்து, சுரேஷ் வீட்டின் அருகே மர்ம நபர் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தினார். இதில் அந்த மோட்டார் சைக்கிள் கடலையூர் ஜமீன் உசிலம்பட்டி நடுத்தெரு சக்கரைச்சாமி மகன் வீரசின்னுவுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் சுரேஷ் வீட்டில் செல்போன் திருடியதுடன், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூசாலிப்பட்டியிலுள்ள கல்யாண மண்டபம் அருகே பன்னீர்செல்வம் மகன் மாடசாமியின் செல்போனையும் அவர் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் ெசய்தனர்