கலெக்டர் அலுவலகம் உள்பட 8 இடங்களில்வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்பட 8 இடங்களில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் வடிவேல் தலைமை தாங்கி பேசினார். இணைச் செயலாளர் சங்கர், முன்னாள் மாநில நிர்வாகி பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. ஆகியோரின் அலுவலக நடைமுறைக்கு எதிரான செயல்பாடுகளை கண்டித்தும், எந்த விசாரணையும் இன்றி பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி தனி தாசில்தார் மனோஜ்முனியன் மீதான பணி இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர். இதேபோல், பெரியகுளம், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தேனி, ஆண்டிப்பட்டி, போடி, பெரியகுளம், உத்தமபாளையம் தாலுகா அலுவலகங்கள் முன்பும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.