கோவில்பட்டி அருகே பலசரக்கு கடையில் ரூ.10 ஆயிரம் திருட்டு
கோவில்பட்டி அருகே பலசரக்கு கடையில் ரூ.10 ஆயிரம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகேயுள்ள புது அப்பனேரி கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பார்த்திபன் (வயது 33). இவர் இளையரசனேந்தல் ரோட்டில் பலசரக்குகடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு அவர் வீட்டிற்கு சென்றார். நேற்று காலையில் பார்த்தீபன் கடைக்கு வந்தார். அப்போது கடையில் முன்பக்க ஷட்டர் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது, கல்லாவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் அரிசி, பலசரக்கு பொருட்களும், கண்காணிப்பு கேமரா போன்றவையும் திருடப்பட்டு இருந்தன. நள்ளிரவில் மர்ம நபர் கடையின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹரிகிருஷ்ணன், அமல் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கடையில் பணம், பொருட்களை திருடி சென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.