137 அடி உயரத்தில் அமைகிறது கருணாநிதிக்கு கடலுக்குள் பிரமாண்ட 'பேனா' நினைவுச்சின்னம்


137 அடி உயரத்தில் அமைகிறது கருணாநிதிக்கு கடலுக்குள் பிரமாண்ட பேனா நினைவுச்சின்னம்
x

கருணாநிதியை கவுரவிக்கும் வகையில் மெரினாவில் கடலுக்குள் 137 அடி உயரத்தில் ‘பேனா' நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ளது. பார்வையாளர்கள் நடந்து சென்று பார்வையிட கடல் மீது பாலமும் அமைக்கப்படுகிறது.

சென்னை,

தி.மு.க. தலைவராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி மரணம் அடைந்தார். அவருக்கு எழுத்துகள் மீது தீராத காதல் இருந்தது. அவர் கட்சியினருக்கு பல கடிதங்களை எழுதியுள்ளார். இதனால் 'கடிதங்களின் மனிதர்' என அவர் செல்லமாக அழைக்கப்பட்டார். இதுதவிர ஏராளமான புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். தன்னுடைய எழுத்துகளால் தமிழ் இலக்கியத்துக்கு அவர் அளித்த பங்களிப்பு அளவிட முடியாதது ஆகும்.

அவருக்கு கடிதம் எழுதுவதில் இருந்த அன்பை பிரதிபலிக்கும் வகையில், அவர் மறைந்தபோது அவரது உடலுடன் 'பேனா'வும் (எழுதுகோல்) வைத்து அடக்கம் செய்யப்பட்டது.

தற்போது அவருக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் ரூ.39 கோடி செலவில் 2.21 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

'பேனா' நினைவுச்சின்னம்

இந்த நிலையில், தமிழ் இலக்கியத்துக்கு கருணாநிதியின் பங்களிப்பினை கவுரவிக்கும் வகையில், மெரினாவில் வங்காள விரிகுடா கடலுக்குள் அவருக்கு விருப்பமான 'பேனா' வடிவிலான பிரமாண்டமான நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ளது. அதில், செங்குத்தாக 42 மீட்டர் உயரத்தில் அதாவது சுமார் 137 அடி உயரத்தில் 'பேனா' கூர்முனையுடன் நிற்பது போன்று வடிவமைக்கப்பட இருக்கிறது. 'பேனா' நினைவுச்சின்னத்தை ஒட்டி புல்வெளிகள் உள்பட கண்ணை கவரும் வகையிலான கலை நயமிக்க ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.

கருணாநிதி நினைவிடத்தில் இருந்து நடுக்கடலில் அமைக்கப்படும் 'பேனா' நினைவுச்சின்னத்துக்கு 290 மீட்டர் நிலப்பரப்பிலும், 360 மீட்டர் கடலின் மேலேயும் செல்லும் வகையில் 650 மீட்டர் நீளத்தில் பிரமாண்ட இரும்பு பாலம் நிறுவப்படுகிறது. கடல் அலைகள் எழும்பும் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்தில், 7 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ள இரும்பு பாலத்தில் பார்வையாளர்கள் கடலின் அழகை ரசித்தவாறு நடந்து செல்வதற்கு ஏதுவாக கண்ணாடியிலான பாதை வசதிகளும் செய்யப்பட உள்ளன.

மத்திய அரசின் ஒப்புதலுக்கு...

கடலின் உள்ளே அமைக்கப்பட உள்ள 'பேனா' நினைவுச்சின்னத்துக்கு 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னம்' என்று பெயர் சூட்டப்பட உள்ளது. ரூ.80 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள 'பேனா' நினைவுச்சின்னத்துக்கான திட்டத்தை பொதுப்பணித்துறை தீட்டியிருக்கிறது. மாநில அளவில் 'பேனா' நினைவுச்சின்னத்துக்கு பச்சை கொடி காட்டப்பட்டுவிட்டது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்த நினைவுச்சின்னம் கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் கீழ் வருகிறது.

இதையடுத்து இந்த திட்டம் தொடர்பான முன்மொழிவு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக விரைவில் அனுப்பப்பட உள்ளது. சென்னையில் அமைக்கப்பட உள்ள 'பேனா நினைவுச்சின்னம்' போன்று மராட்டிய மாநிலம் மும்பையில் அரபி கடலின் உள்ளே மாமன்னன் சத்ரபதி சிவாஜிக்கு, அந்த மாநில அரசு நினைவுச்சின்னம் எழுப்பி வருகிறது. அதற்கு சமீபத்தில்தான் கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணைய அனுமதி கிடைத்தது.

திருவள்ளுவர் சிலை-'பேனா நினைவுச்சின்னம்'

உலக பொதுமறையான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு தமிழக அரசின் சார்பில் கன்னியாகுமரியில் கடலின் உள்ளே 133 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார். அந்த சிலையை விடவும் அதிக உயரத்தில் தற்போது கருணாநிதியை கவுரவிக்கும் விதமாக சுமார் 137 அடி உயரத்தில் 'பேனா நினைவுச்சின்னம்' அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story