சாத்தான்குளம் அருகே துணை மின் நிலையத்தில் போதையில் தூங்கிய ஊழியரால் இருளில் மூழ்கிய கிராமங்கள்


தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:47 PM GMT)

சாத்தான்குளம் அருகே துணை மின் நிலையத்தில் போதையில் தூங்கிய ஊழியரால் கிராமங்கள் இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே துணை மின் நிலையத்தில் மின் இணைப்பை துண்டித்து விட்டு போதையில் தூங்கிய ஊழியரால் 25 கிராமங்கள் இருளில் மூழ்கின.

இரவில் திடீர் மின்தடை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தை அடுத்த பழனியப்புரத்தில் துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பழனியப்பபுரம், பேய்க்குளம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டது. நீண்ட நேரமாக மின் வினியோகம் செய்யப்படாததால், தூக்கம் வராமல் அவதிப்பட்ட பொதுமக்கள் பழனியப்பபுரம் துணை மின் நிலையத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். ஆனால் அங்கு எந்த ஊழியரும் தொலைபேசியை எடுத்து பேசவில்லை.

போதையில் மயங்கிய ஊழியர்

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் மின்வாரிய சக ஊழியர்கள் பழனியப்பபுரம் துணை மின் நிலையத்துக்கு சென்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த மின்வாரிய ஊழியர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இரவு 10 மணியளவில் மின்வினியோகத்தை உயரழுத்த மின்கம்பியில் மாற்றி கொடுப்பதற்காக, மின்சாரத்தை துண்டித்த அவர் பின்னர் மீண்டும் மின் இணைப்பு வழங்காமல் போதையில் மயங்கியதாக தெரிகிறது.

அவரை நீண்ட நேரமாக எழுப்ப முயன்றும் முடியாததால், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த சக ஊழியர்கள் பின்னர் மின் இணைப்பு வழங்கினர். இரவில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட திடீர் மின்தடையால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.


Next Story