ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில்வைகுண்ட ஏகாதசி திருவிழா சுவாமி தரிசன நேரம் மாற்றத்திற்கு எதிர்ப்பு
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா சுவாமி தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் போராட்டம் அறிவித்துள்ளனர்.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா சுவாமி தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் போராட்டம் அறிவித்துள்ளனர்.
வைகுண்ட ஏகாதசி திருவிழா
நவதிருப்பதி கோவில்களில் கடந்த 23-ந்தேதி வைகுண்ட ஏகாதசி பகல் பத்து திருவிழா தொடங்கியது. இராப்பத்து திருவிழாவில் முதல் நாளான வருகிற ஜன.2-ந்தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நவத்திருப்பதி கோவில்களில் சுவாமி சயன திருக்கோலத்தில் எழுந்தருளி ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரையும் மற்ற கோவில்களில் சுவாமிகள் இரவு 7 மணி வரையும் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் இரவு 7 மணிக்கும் தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவிலில் இரவு 11மணிக்கும், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நள்ளிரவு 12.30 மணிக்கும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
பா.ஜ.க.வினர் எதிர்ப்பு
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் ஆழ்வார்திருநகரி கோவிலில் இரவு 7 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் சயன திருக்கோலத்தில் சுவாமி பொலிந்து நின்றபிரான் மதியம் 1.30 மணி வரை பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் எனவும் கோவில் நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அக்கட்சியினர் மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமையில் கோவில் நிர்வாகத்திடம் தரிசன நேரத்தை மாற்றக்கூடாது என வலியுறுத்தினர்,
பின்னர் மாவட்ட தலைவர் கூறுகையில், நவதிருப்பதி கோவில்களில் ஆழ்வார்திருநகர் ஆதிநாதர் ஆழ்வார் கோவில் ஒன்பதாவது திருத்தலமாகும். வைகுண்ட ஏகாதசி அன்று மற்ற கோவில்களுக்கு சென்று வரும் பக்தர்கள் கடைசி கோவிலான ஆழ்வார்திருநகரி வரும்போது மாலை வரை சயன கோலத்தில் சுவாமி இருந்தால் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். அதைவிடுத்து மதியம் 1.30 மணிக்கே சயன கோலம் முடிவிற்கு வந்தால் பக்தர்கள் தரிசனம் செய்யமுடியாமல் போய்விடும். வழக்கமான நடைமுறையை மாற்றக்கூடாது. இதை மீறினால், வருகிற டிசம்பர் 29-ந் தேதி உண்ணாவிரத போராட்டமும், 30-ந் முற்றுகை போராட்டமும் நடத்தப்படும், என்றார்.
அதிகாரி விளக்கம்
இதுகுறித்து செயல் அலுவலர் அஜித் கூறுகையில், வைகுண்ட ஏகாதசி திதியை கருத்தில் கொண்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நடைமுறை பின்பற்றப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஏகாதசி திதி நேரத்தில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆழ்வார்திருநகரி ஜீயர் மற்றும் ஆச்சாரியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளர். சுவாமி. சயன திருக்கோலத்திற்கு பிறகு பல்வேறு பணிகள் உள்ளது. மூலவர் சன்னதி திறந்திருப்பதால் பக்தர்கள் இரவு வரை சுவாமி தரிசனம் செய்யலாம், என்றார்.