புஞ்சைபுளியம்பட்டி அம்மா உணவகத்தில் நகராட்சி அதிகாரிகள்- மகளிர் சுய உதவிக்குழுவினர் வாக்குவாதம்
வாக்குவாதம்
புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் அருகே நகராட்சி சார்பில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 9 பேர் கொண்ட மகளிர் குழுவினர் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் நடந்த புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கூட்டத்தில், பல்வேறு முறைகேட்டில் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஈடுபடுவதாக கூறி அவர்களை மாற்ற வேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் நேற்று மாலை அம்மா உணவகத்துக்கு வந்த அதிகாரிகள் மகளிர் குழுவினரிடம், 'இன்றுடன் (அதாவது நேற்று) பணியை விட்டு செல்லுங்கள்' என்றதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகளிர் சுயஉதவி குழுவினர் என்ன குற்றச்சாட்டின் அடிப்படையில் எங்களை பணியில் இருந்து விலக சொல்லுகின்றீர்கள் என கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்து அங்கு வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ஆதரவாக பேசினர்.
இதனையடுத்து நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் முகமது உசேன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிவில் தற்காலிகமாக மகளிர் சுய உதவி குழு மாற்றத்தை தள்ளி வைப்பதாக ஆணையாளர் முகமது உசேன் கூறினார். இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.