சீனாபுரம் சந்தையில் விர்ஜின் கலப்பின கிடாரி கன்று ரூ.55 ஆயிரத்துக்கு விற்பனை
சீனாபுரம் சந்தையில் விர்ஜின் கலப்பின கிடாரி கன்று ரூ.55 ஆயிரத்துக்கு விற்பனையானது.
பெருந்துறை
சீனாபுரம் சந்தையில் விர்ஜின் கலப்பின கிடாரி கன்று ரூ.55 ஆயிரத்துக்கு விற்பனையானது.
மாட்டுச்சந்தை
பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரத்தில் நேற்று மாட்டுச்சந்தை நடந்தது. இந்த சந்தைக்கு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்த நாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 100-ம், இதே இன கிடாரி கன்றுகள் 150-ம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடுகள் 120-ம், இதே இன கிடாரி கன்றுகள் 180-ம் விற்பனைக்கு வந்திருந்தன. கடந்த வாரத்தை விட நேற்று நடந்த சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து இருந்தது. இதேபோல் விலையும் அதிகரித்து இருந்தது.
விர்ஜின் கலப்பின கிடாரி
சந்தையில் விர்ஜின் கலப்பின கிடாரி கன்று ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரத்துக்கு விற்பனையானது. இந்த இன கிடாரி கன்றுகள் இதுவரை இந்த விலைக்கு விற்றதில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.35 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்றது.
சிந்து மற்றும் ஜெர்சி இன கறவை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் வரையிலும் விற்றது. ரூ.1½ கோடிக்கு மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர்.
வியாபாரிகள்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, அன்னூர், காரமடை, திருப்பூர் மாவட்டம் அவினாசி, ஊத்துக்குளி, குன்னத்தூர், காங்கேயம், வெள்ளக்கோவில், நத்தக்காடையூர், முத்தூர் ஈரோடு மாவட்டம் அறச்சலூர், அவல்பூந்துறை, சென்னிமலை, பவானி, அந்தியூர், கோபி, திங்களூர், காஞ்சிக்கோவில், விஜயமங்கலம் ஆகிய ஊர்களிலிருந்து வந்திருந்த வியாபாரிகளும், விவசாயிகளும் மாடுகளை வாங்கிச்சென்றனர்.