குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு சீல் -அதிகாரிகள் நடவடிக்கை
குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
குன்னூர்
குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
9 கடைகள்
குன்னூர் நகராட்சிக்கு சொந்தமாக தினசரி மார்க்கெட்டில் 910 கடைகள் உள்ளன. இங்கு பெரும்பாலான கடைகள் உள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதில், சில கடைகளுக்கு, 40 ஆயிரம் ரூபாய் வரை வாடகை வசூலித்து, உள் வாடகைக்கு விட்ட நபர் நகராட்சிக்கு, 2,000 மட்டுமே வாடகையாக செலுத்துவதாக கூறப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் நகராட்சிக்கு போதிய வருவாய் இல்லாமல் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமலும், மின் கட்டண பாக்கியை செலுத்தவும், நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. இந்த நிலையில் பல மடங்கு வாடகை கட்டாத கடைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 9 கடைகள் அதிக பாக்கி வைத்துள்ளது தெரிய வந்தது.
சீல் வைப்பு
இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் நகராட்சி வருவாய் துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் 9 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் வாடகை செலுத்தாத கடை உரிமையாளர்கள் விரைவில் வாடகை செலுத்தும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாடகை செலுத்த தவறினால் தொடர்ந்து கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.