தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் பட்டமளிப்பு விழா
தெற்கு கள்ளிகுளம் தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
வள்ளியூர் தெற்கு:
வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் 46-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நேற்று நடந்தது. கல்லூரி செயலாளர் ராமநாதன் நாடார், தலைவர் காளிதாஸ் நாடார், பொருளாளர் செல்வராஜ் நாடார், நெல்லை தட்சணமாற நாடார் சங்க செயலாளர் ராஜகுமார் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராஜன் ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு அரசு உதவிபெறும் மாணவ-மாணவிகளுக்கும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) சாக்ரடீஸ் சுயநிதி பிரிவு மாணவ-மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினர். பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 12 மாணவர்கள் உள்பட மொத்தம் 598 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.
விழாவில் கல்லூரிக்குழு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.