ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகள் மழையில் நனையாமல் இருக்க நடவடிக்கை; மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகள் மழையில் நனையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகள் மழையில் நனையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
'தினத்தந்தி' செய்தி எதிரொலி
ஈரோடு பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதனால் பஸ் நிலையத்தில் எப்போதும் நெரிசலாக காணப்படுகிறது. இங்கு புதிதாக நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது. மழை பெய்யும்போது இங்கு ஒதுங்கும் பயணிகள் நனைந்து கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
மேலும் இருக்கை வசதி, குடிநீர் வசதி செய்யப்படவில்லை. பயணிகள் நடந்து செல்வதற்கு இடையூறாக கம்பிகள் பொருத்தப்பட்டு உள்ளது என்று பொதுமக்கள் கூறிய புகார்கள் 'தினத்தந்தி'யில் செய்தியாக நேற்று முன்தினம் பிரசுரமாகி இருந்தது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.
தடுப்பு அரண்
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் அளித்துள்ள விளக்கம் வருமாறு:-
ஈரோடு மாநகராட்சி பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி பணிகள் மற்றும் பஸ்களில் பயணிகள் நின்று ஏறுவதற்காக வசதியாக புதிதாக 4 நடைமேடை அமைப்பதற்கான விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு இடையே பஸ்கள் செல்லும் பாதையாக உள்ள காரணத்தால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி விபத்துகள் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
நடைமேடையின் மேற்கூரை அனுமதிக்கப்பட்ட உயரத்திற்கு தகுந்தாற்போல் அமைக்கப்பட்டு உள்ளது. மழை நேரங்களில் நடைமேடையில் மழைச்சாரல் அடிக்காமல் இருக்க நடைமேடையின் இருபுறமும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மழைச்சாரல் விழாதபடி தடுப்பு அரண் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நடைமேடை பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் பயணிகள் அமருவதற்கு வசதியாக இருக்கைகள் மற்றும் குடிநீர் வசதி அமைக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.