ஈரோடு ரெயில் நிலையத்தில் கூடுதல் நடை மேடைகளுக்கு முழுமையாக மேற்கூரை அமைக்க வேண்டும்; பயணிகள் கோரிக்கை
ஈரோடு ரெயில் நிலையத்தில் நடைமேடைகளுக்கு முழுமையாக மேற்கூரை அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோடு ரெயில் நிலையத்தில் நடைமேடைகளுக்கு முழுமையாக மேற்கூரை அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ரெயில் நிலையம்
ஈரோடு ரெயில் நிலையம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ரெயில் நிலையமாகும். ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட ரெயில் நிலையங்களில் பழமை மாறாமல் இன்னும் செயல்பட்டு வருகிறது.
இங்கு தினசரி 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில், திருச்சி, பாலக்காடு, நெல்லை பயணிகள் ரெயில்கள் இங்கிருந்து புறப்பட்டு செல்கின்றன. இதனால் தினமும் பல்லாயிரகணக்கானவர்கள் இங்கு வந்து செல்கிறார்கள். அதிக அளவில் ரெயில்கள் வந்து செல்வதால், சில நேரங்களில் ரெயில் நிறுத்த இடம் கிடைக்காமல் பல ரெயில்கள் நிலையத்துக்கு வெளியே காத்திருக்கவேண்டிய சூழல் உள்ளது.
மேலும், ஈரோடு சரக்கு ரெயில்கள் வந்து பொருட்கள் ஏற்றி இறக்கும் முனையமாகவும் உள்ளது. மின்சார ரெயில் என்ஜின் பணிமனை, டீசல் என்ஜின் பணிமனை மற்றும் மிகப்பெரிய ரெயில்வே குடியிருப்புடன் ரெயில் நிலையம் அமைந்திருக்கிறது.
நடைமேடை
ஆனால் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரங்களின் எண்ணிக்கை 4 மட்டுமே இருக்கிறது. கூடுதலாக ஒரு நடைமேடை அதாவது பிளாட்பாரம் வேண்டும் என்று பல காலமாக ஈரோடு பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுபோல் 4 நடைமேடைகளிலும் முழுமையாக மேற்கூரை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுபற்றி ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் கே.என்.பாஷா கூறும்போது, 'ஈரோடு ரெயில் நிலையத்துக்கு கூடுதலாக ஒரு பிளாட்பாரம் வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அதை உடனடியாக அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். பிளாட்பாரங்களில் மேற்கூரை முழுமையாக அமைக்க வேண்டும். ரெயில் நிலையத்தின் பயணச்சீட்டு முன்பதிவு மையம், வரவேற்பு அறை பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும். இதுபோல் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு பெரியார் பெயர் சூட்டப்பட வேண்டும்' என்றார்.
மேற்கூரை
சேலம் கோட்ட ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜி.இளங்கவி கூறியதாவது:-
ஈரோடு ரெயில் நிலையத்தில் கூடுதலாக 5-வது நடைமேடை மிகவும் அவசியமானது. இதுபோல், தற்போது உள்ள நடைமேடைகளை இணைக்கும் வகையில் உயர் மட்ட நடைபாதைகள் அமைக்க வேண்டும். பிளாட்பாரங்கள் முழுவதும் பயணிகள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் சிரமப்படுகிறார்கள். இந்த நிலை மாற மேற்கூரை அமைக்கப்பட வேண்டும். ஈரோடு வழியாக கோவையில் இருந்து பெங்களூருக்கு காலை நேர ரெயில் இயக்கப்பட வேண்டும். கோவையில் இருந்து ஈரோடு வழியாக தூத்துக்குடிக்கு காலை நேர ரெயில் இயக்கவேண்டும். ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு சென்று சேரும் நேரத்தை அதிகாலை 5 மணியாக மாற்ற வேண்டும். மும்பை-நாகர்கோவில் மற்றும் தாதர்-நெல்லை ரெயில்களை மீண்டும் ஈரோடு வழியாக இயக்கவேண்டும். இந்த கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.