ஈரோட்டில்போதை மாத்திரைகளை ஊசி மூலம் ஏற்றி விற்பனை செய்த 4 வாலிபர்கள் கைது
ஈரோட்டில் போதை மாத்திரைகளை ஊசி மூலம் ஏற்றி விற்பனை செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோட்டில் போதை மாத்திரைகளை ஊசி மூலம் ஏற்றி விற்பனை செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
போதை ஊசி விற்பனை
ஈரோடு சூளை மற்றும் வில்லரசம்பட்டி பகுதிகளில் சிலர் போதை ஊசிகளை விற்பனை செய்து வருவதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் இந்த கும்பலை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் ஈரோடு வில்லரசம்பட்டி சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படியாக 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
4 வாலிபர்கள் கைது
விசாரணையில் அவர்கள், ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியை சேர்ந்த நவீன் (வயது 21), வீரப்பன்சத்திரம் அசோகபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30) ஆகியோர் என்பதும், இவர்கள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரண மாத்திரைகள், தூக்க மாத்திரைகள் மற்றும் இருமல் மருந்து ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து அதை ஊசி மூலம் நிரப்பி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன், மணிகண்டனை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 14 மாத்திரைகள், 4 ஊசிகள் மற்றும் மாத்திரை விற்ற பணம் ரூ.1,200 பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் சூளை மல்லிநகர் பகுதியில் நின்று கொண்டு போதை ஊசிகளை விற்பனை செய்த, பி.பி.அக்ரஹாரம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த அன்புராஜ் (23), மாணிக்கம்பாளையம் பாண்டி நகர் பகுதியை சேர்ந்த தீபக் சவுத்ரி (21) ஆகியோரையும் வீரப்பன்சத்திரம் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 16 மாத்திரைகள், 6 ஊசிகள் மற்றும் ரூ.800 பறிமுதல் செய்யப்பட்டன.