ஈரோட்டில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு
ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு
ஈரோட்டில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வெள்ளப்பெருக்கு
கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையிலும் ஆற்றின் இரு கரைகளை தொட்டபடி பரந்து விரிந்து தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஆற்றில் குளிப்பதற்கு, துணிதுவைப்பதற்கு, ஆற்றங்கரையில் நின்று செல்பி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
விழிப்புணர்வு
கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. மேலும், வருவாய்த்துறை சார்பில் ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் நேற்று மாலை அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கரையோரமாக பொதுமக்களின் நடமாட்டம் உள்ளதா? என்று அவர்கள் கண்காணித்தனர். மேலும் ஒலி பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தீயணைப்பு படை வீரர்கள், போலீசார் ஆகியோர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கரையோரமாக வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தால் கரையோர மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.