ஈரோட்டில்தி.மு.க. கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு;4 அமைச்சர்கள் பங்கேற்பு


ஈரோட்டில்தி.மு.க. கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு;4 அமைச்சர்கள் பங்கேற்பு
x

ஈரோட்டில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் நடந்த தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் 4 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோட்டில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் நடந்த தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் 4 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

பணிமனை திறப்பு

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 24-வது வார்டில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை தாங்கினார். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத்துறை அமைச்சா் செந்தில்பாலாஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பணிமனையை திறந்து வைத்தனர்.

அப்போது அமைச்சர்கள் பேசும்போது, 'தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய, இங்குள்ள மக்கள் ஒவ்வொருவரும் 20 பேரிடம் சென்று வாக்கு கேட்க வேண்டும். வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, தமிழக அரசின் சாதனைகளை கூறி வாக்கு கேட்க வேண்டும்' என்றனர்.

இதில் மாநகர செயலாளர் சுப்பிரமணி, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், மண்டல தலைவர் பி.கே.பழனிசாமி, கவுன்சிலர் ஈ.பி.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆணும், பெண்ணும் சமம்

அதைத்தொடர்ந்து திருநகர் காலனி கற்பக விநாயகர் வீதி, கிருஷ்ணம்பாளையம், ஜெயகோபால் வீதி, முத்து மாரியம்மன் கோவில் பகுதிகளில், அமைச்சர்கள் சு.முத்துசாமி, சி.வி.கணேசன், கே.என்.நேரு, வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் 'கை' சின்னத்திற்கு வாக்கு கேட்டு, திறந்த ஜீப்பில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்தனர். அப்போது அமைச்சர் சி.வி.கணேசன் பேசும்போது கூறியதாவது:-

கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்கள் ஆதிக்கம் மட்டும் தான் இருந்தது. பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. பின்னர், ஆணும், பெண்ணும் சமம் என மாற்றியவர் பெரியார். உலகத்திற்கே சமூக நீதியை கற்றுக்கொடுத்தவரும் பெரியார் தான். அவர் பிறந்த மண் தான் இந்த மண். பெரியார் பேரன் தான் நமது வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

மாடல் மாநகராட்சி

இவர் வெற்றி பெற்று சட்ட மன்றத்திற்கு சென்றால் இந்த தொகுதிக்கு பாதாள சாக்கடை, பள்ளிக்கூடம், சாலை, பஸ் நிலையம், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி என எது வேண்டும் என கேட்டாலும் முதல் -அமைச்சர் தட்டாமல் செய்து கொடுப்பார்.

ஈரோடு மாநகராட்சியை மாடல் மாநகராட்சியாக கொண்டு வருவார். அவருக்கு நீங்கள் அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்

இவ்வாறு அமைச்சர் சி.வி.கணேசன் பேசினார்.


Next Story