ஈரோட்டில் மகளிர் உரிமைத்தொகை வழங்கக்கோரிபெண்கள் சாலை மறியல்
ஈரோட்டில் மகளிர் உரிமைத்தொகை வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மகளிர் உரிமைத்தொகை வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகளிர் உரிமைத்தொகை
தமிழக அரசு சார்பில் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அவ்வாறு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள், மீண்டும் மேல் முறையீடு செய்ய கடந்த 16-ந்தேதி ஈரோடு தாலுகா அலுவலகம் வந்தனர்.
ஆனால் சர்வர் பிரச்சினையால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஈரோடு தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் அங்கிருந்து கலைந்து போக செய்தார்.
சாலை மறியல்
இதேபோல் நேற்று காலையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மேல்முறையீடு செய்ய தாலுகா அலுவலக இ-சேவை மையத்துக்கு வந்திருந்தனர். ஆனால் சர்வர் பிரச்சினையால் பெண்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டது தொடர்பாக விரக்தியில் வந்த பெண்கள், சர்வரும் வேலை செய்யாததால் பொறுமை இழந்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் மதியம் 12.30 மணி அளவில் திடீரென ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு உள்ள ரோட்டில் அமர்ந்து மகளிர் உரிமைத்தொகை வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து ஈரோடு டவுன் போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்து தாலுகா அலுவலகம் அழைத்து சென்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், "அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும்" என்றார். இதை ஏற்றுக்கொண்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக திருமகன் ஈவெரா சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.