ஈரோட்டில் பள்ளிக்கூடங்களுக்கு இடையே செஸ் போட்டி
ஈரோட்டில் பள்ளிக்கூடங்களுக்கு இடையே செஸ் போட்டி நடைபெற்றது
ஈரோட்டில் நடந்த பள்ளிக்கூடங்களுக்கு இடையேயான செஸ் போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குழந்தைராஜன் தொடங்கி வைத்தார்.
செஸ் போட்டி
பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் செஸ் போட்டி நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான செஸ் போட்டி தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் நேற்று தொடங்கியது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,088 அரசு பள்ளிக்கூடங்களில் நேற்று பள்ளிக்கூடங்களுக்கு இடையேயோன செஸ் போட்டி நடந்தது.
ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடந்த செஸ் போட்டிக்கு தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாலமோன் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குழந்தைராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செஸ் போட்டியை தொடங்கி வைத்தார்.
பரிசு-சான்றிதழ்
11, 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் அனைத்து பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகள் குறுமைய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். அதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள், மாவட்ட அளவிலான செஸ் போட்டியிலும், பின்னர் மாநில அளவிலான செஸ் போட்டிகளிலும் பங்கேற்பார்கள்.