ஈரோட்டில் மொபட்டில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது; 1,100 கிலோ பறிமுதல்
1,100 கிலோ பறிமுதல்
ஈரோட்டில் மொபட்டில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.
ரேஷன் அரிசி பதுக்கல்
ஈரோடு மாவட்ட குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீதும், பதுக்கி வைப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், தீவிர வாகன சோதனையிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஈரோடு கிருஷ்ணன்பாளையம் பம்பிங் ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1,100 கிலோ பறிமுதல்
அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 20 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அந்த பகுதியை போலீசார் கண்காணித்த போது, ஒருவர் மொபட்டின் முன்பு 2 மூட்டைகளை வைத்தப்படி வந்து கொண்டிருந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது, அதில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர், பவானி குருப்பநாயக்கன் பாளையம் மேட்டூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த தனராஜ் (45) என்பதும், அவர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தனராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1,100 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டன.