ஈரோட்டில் சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டம் 3 அமைச்சர்கள் பங்கேற்பு


ஈரோட்டில்  சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டம்  3 அமைச்சர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 29 Sept 2022 1:00 AM IST (Updated: 29 Sept 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

3 அமைச்சர்கள் பங்கேற்பு

ஈரோடு

ஈரோட்டில் நடந்த சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டத்தில் 3 அமைச்சர்கள் பங்கேற்றனர்.

ஆய்வு கூட்டம்

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை சார்பில் சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டம், ஈரோடு மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்ததாவது:-

சாலை விபத்து

ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 132 கிலோ மீட்டர் நீளமுள்ள ரோடுகள், நெடுஞ்சாலைத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் விபத்து நடைபெறும் 27 இடங்கள் கண்டறியப்பட்டு 23 இடங்கள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு, மீதமுள்ள 4 இடங்களில் சாலை பாதுகாப்பு திட்டத்தின் மூலம் நிரந்தர தீர்வுகாண பணிகள் நடைபெற்று வருகிறது.

விபத்துகளை தவிர்க்க சாலைக்கு தரக்கட்டுப்பாடு, பாதுகாப்பான பயணத்திற்கு சாலை பாதுகாப்பு, பசுமையான சாலைக்கு மரம் வளர்த்தல் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. பவானி புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

50 சதவீதம்

இந்திய அளவில் 2025-ம் ஆண்டிற்குள் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குறிக்கோளின்படி தமிழ்நாடு இந்த ஆண்டே சாலை விபத்துகள் குறைந்து குறிக்கோளை அடைந்து விட்டது. ஈரோடு மாவட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின்கீழ் 1587.697 கிலோ மீட்டர் நீளமுள்ள ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், எம்.பி.க்கள் அந்தியூர்.ப.செல்வராஜ், அ.கணேசமூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், சி.சரஸ்வதி, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி என்.சிவகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர்கள் முருகேசன், சந்திரசேகர், பாலமுருகன், நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்டராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story