ஈரோட்டில்தேங்காய்களை தீயில் சுட்டு ஆடி மாதத்தை வரவேற்ற பெண்கள்
ஈரோட்டில் தேங்காய்களை தீயில் சுட்டு ஆடி மாதத்தை பெண்கள் வரவேற்றனா்
ஈரோட்டில் தேங்காய்களை தீயில் சுட்டு ஆடி மாதத்தை பெண்கள் வரவேற்றனர்.
ஆடி மாத பிறப்பு
ஈரோட்டில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பிறப்பை வெகுசிறப்பாக கொண்டாடி வரவேற்பது வழக்கம். அப்போது வீட்டு வாசலில் பெண்கள் தேங்காய்களை சுட்டு விநாயகருக்கு படைத்து வழிபாடு நடத்துவது தனிச்சிறப்பு. அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஆடி மாத பிறப்பு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பெண்கள் தங்களது வீடுகளை சுத்தம் செய்து வாசலில் சுண்ணாம்பு, சாணி மொழுகி அழகிய கோலமிட்டனர். தீயில் சுடுவதற்கு தேவையான தேங்காய்களை தயார் செய்தனர். தேங்காயின் கண் பகுதியை உடைத்து அதில் இருந்த தண்ணீரை சிறிதளவு வெளியேற்றி பச்சரிசி, நிலக்கடலை, எள், நாட்டு சர்க்கரை, பச்சை பயறு ஆகியவற்றை உள்ளே வைத்தனர். பின்னர் நீளமான அழிஞ்சி குச்சியில் தேங்காய்கள் சொருகி வைக்கப்பட்டன.
விநாயகர் வழிபாடு
வீட்டின் முன்பு நெருப்பு பற்ற வைத்து அதில் பெண்கள் தேங்காய்களை சுட்டனர். பின்னர் சுடப்பட்ட தேங்காய்களை அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கொண்டு சென்று வழிபட்டனர். இதையடுத்து தேங்காய்களை உடைத்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்து சாப்பிட்டனர்.
ஈரோடு குமலன் குட்டை, ஆசிரியர் காலனி, தெப்பக்குளம் வீதி, வளையக்கார வீதி, மரப்பாலம், கொல்லம்பாளையம், வீரப்பன்சத்திரம், பெரியவலசு, முனிசிபல்காலனி உள்பட பல்வேறு பகுதிகளில் தேங்காய்களை தீயில் சுட்டு பெண்கள் வழிபட்டனர். ஆடிமாத பிறப்பையொட்டி பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.