ஈரோட்டில்டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை


ஈரோட்டில்டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை
x

ஈரோட்டில் டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தினாா்கள்.

ஈரோடு

ஈரோடு திண்டல் சக்தி நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் சச்சிதானந்தம் (வயது 65). சொந்தமாக லாரிகள் வைத்து, குறிப்பிட்ட நிறுவனங்களில் ஒப்பந்தம் பெற்று, சரக்குகளை ஏற்றி அனுப்பும் பணி செய்கிறார். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இவர் நெருங்கிய நண்பர். கடந்த 1½ ஆண்டுகளுக்கு மேலாக மதுபான தொழிற்சாலைகளில் இருந்து மதுபானங்களை பெற்று, மண்டல, மாவட்ட அளவிலான டாஸ்மாக் குடோன்களுக்கு கொண்டு செல்லவும், அங்கிருந்து டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்லவும் லாரி ஒப்பந்தத்தை பெற்று செயல்படுத்தி வருகிறார். மாநில அளவில் இவர் ஒருவரே லாரி ஒப்பந்ததாரராக இருந்து, 300-க்கும் மேற்பட்ட லாரிகள், சரக்கு வேன்களில் சப்ளை செய்து வருகிறார். சமீபத்தில் 150-க்கும் மேற்பட்ட சரக்கு வேன்களை, இவர் சொந்தமாக வாங்கியதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் நேற்று அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய, 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அதன்படி ஈரோட்டில் சச்சிதானந்தம் வீட்டிலும், செங்கோடம்பாளையம் காதுகேளாதோர் பள்ளிக்கூடம் அருகே உள்ள சச்சிதானந்தத்துக்கு சொந்தமான கே.எஸ்.எம். டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திருச்சி மற்றும் கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து வந்த 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் காலை 8 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story