ஈரோட்டில்கணவர் வீட்டு முன்பு பெண் திடீர் தர்ணா
ஈரோட்டில் கணவர் வீட்டு முன்பு பெண் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோட்டில் கணவர் வீட்டு முன்பு பெண் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்ணா போராட்டம்
ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 49). இவருடைய மனைவி ரஜிதா (35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன்- மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர். ரஜிதா கோவை சுண்டக்காமுத்தூரில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். 3 மகன்களும் தந்தையிடம் உள்ளனர்.
இந்தநிலையில் கருங்கல்பாளையத்தில் உள்ள வீடு தனது பெயரில் இருப்பதாகவும், அந்த வீட்டில் இருந்து கணவர் வெளியேற வேண்டும் என்றும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ரஜிதா புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக ஸ்ரீகுமாரிடம் முறையிடுவதற்காக கருங்கல்பாளையத்தில் உள்ள வீட்டுக்கு ரஜிதா நேற்று காலை சென்றார். அப்போது அவர் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
வங்கி கடன்
இதுகுறித்து ரஜிதா கூறியதாவது:-
எனக்கும், எனது கணவருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்பு விவாகரத்து ஆனது. எங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டபோதே நான் 3 மகன்களையும் அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றேன். அதன்பிறகு 3 மகன்களையும் அவர் ஈரோட்டுக்கு அழைத்து வந்து விட்டார். இங்குள்ள வீட்டை கட்டியபோது எனது வீட்டில் இருந்து வரதட்சணையாக வழங்கப்பட்ட நகை பயன்படுத்தப்பட்டது. இந்த வீடு எனது பெயரில் தான் இருக்கிறது.
இந்தநிலையில் வங்கி கடனில் இருப்பதால் வீட்டை ஜப்தி செய்வதற்கு வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் வீட்டை விற்க முடிவு செய்தபோது அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் வீட்டை வாங்க முன்வந்தார். வங்கியில் நிலுவையில் இருந்த கடன் ரூ.18 லட்சத்தை அவரே செலுத்தினார். மீதமுள்ள பணத்தை வீடு பத்திரம் கிரையம் செய்யும்போது கொடுப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே வீடு மீட்கப்பட்ட தகவல் கிடைத்ததும் எனது கணவர் ஸ்ரீகுமார் வீட்டில் வந்து குடியேறினார். அவருடன் வேறு ஒரு பெண்ணும் வசிக்கிறார். இந்த பெண் மின்சார வாரியத்தில் அதிகாரியாக உள்ளார். எனவே இந்த வீட்டில் இருந்து எனது கணவர் வெளியேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாக்குவாதம்
இதற்கிடையே கதவு திறக்கப்படாததால் ரஜிதா ஏணி மூலமாக சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே சென்றார். பிறகு சுற்றுச்சுவர் கதவின் பூட்டை அவர் உடைத்து கதவை திறந்தார். அவருடன், வீட்டை வாங்க வந்த விஜயகுமார் மற்றும் உறவினர்கள், ஆதரவாளர்கள் சிலர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார்கள். அங்கிருந்த ஸ்ரீகுமாரிடம் அவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் போலீசார் அங்கு சென்று இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ரஜிதா கூறுகையில், "ரூ.18 லட்சம் ஏற்கனவே வங்கியில் செலுத்தப்பட்டு விட்டது. மேலும் எனது பெயரில் இந்த வீடு இருக்கிறது. எனக்கும், எனது மகன்களுக்கும் உரிய பங்கு கிடைக்க வேண்டும். இந்த வீட்டில் இருந்து கணவர் வெளியேற வேண்டும்", என்றார். இதேபோல் ஸ்ரீகுமார் கூறுகையில், "நான் யாரிடம் இருந்தும் பணம் வாங்கவில்லை. எனது வீட்டில் அத்துமீறி நுழைந்து பிரச்சினை செய்தால் போலீசில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுப்பேன். இந்த வீடு என் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியது. நான் மஞ்சள் காமாலை நோயால் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது என்னை மிரட்டி இந்த வீட்டை அவரது பெயரில் மாற்றி எழுதிவிட்டனர். இதனால் சட்டப்படி நான் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளேன்", என்றார்.
இந்த பேச்சுவார்த்தை மாலை வரை நடந்தது. அதன்பிறகு இருதரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.