ஈரோட்டில்லாரி மோதி பெண் பலிகணவர் கண் முன்னே பரிதாபம்
ஈரோட்டில் லாரி மோதி கணவர் கண் முன்னே பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோட்டில் லாரி மோதி கணவர் கண் முன்னே பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
லாரி மோதல்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் தில்லை நகர் முதல் வீதியை சேர்ந்தவர் காளியண்ணன். ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவி ராதா (வயது 48). இந்த நிலையில் நேற்று மதியம் காளியண்ணன் தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் ஈரோட்டிற்கு வந்தார்.
ஈரோடு காவிரி ரோடு மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி காளியண்ணன் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் ராதா, காளியண்ணன் இருவரும் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.
பெண் சாவு
விபத்தில் படுகாயம் அடைந்த ராதா சம்பவ இடத்திலேயே தனது கணவர் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். காளியண்ணன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ராதாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாகன ஓட்டிகள் சிரமம்
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஓட்டிச்செல்ல மிகவும் சிரமப்படுவதாகவும், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாகவும், எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.