எட்டயபுரம் சந்தையில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி, எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
எட்டயபுரம்:
தீபாவளி பண்டிகையையொட்டி, எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
எட்டயபுரம் ஆட்டுச்சந்தை
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற ஆட்டுச்சந்தைகளில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையும் ஒன்று. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக ஆடுகளை கொண்டு வருவார்கள்.
இதேபோல் மதுரை, சென்னை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகள் வாங்க வருவது வழக்கம்.
இந்த சந்தையில் வாரந்தோறும் ரூ.2 கோடி வரையிலும், பண்டிகை காலங்களில் ரூ.4 கோடி வரையிலும் ஆடுகள் விற்பனை நடைபெறும்.
ஆடுகள் விற்பனை மும்முரம்
24-ந் தேதி(திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் எட்டயபுரத்தில் ஆட்டுச்சந்தை களை கட்டியது. நேற்று முன்தினம் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஆடு விற்பனை நேற்று மதியம் வரை மும்முரமாக நடந்தது.
தீபாவளி பண்டிகை என்பதால் விற்பனைக்கு அதிகளவில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. பிறந்து 3 நாட்கள் வரை ஆன ஆட்டுக்குட்டிகள் ரூ.3,800-க்கும், இளம் ஆடுகள் அதன் எடைக்கு ஏற்ப ரூ.7 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரையிலும், பெரிய ஆடுகள் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.
ரூ.7 கோடி
கடந்த வாரங்களை ஒப்பிடும்போது விலை சற்று குறைவாக இருந்த காரணத்தால் வியாபாரிகள் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கி சென்றனர். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.6 கோடிக்கு விற்பனை நடந்த நிலையில், இந்த ஆண்டில் நேற்று ஒரே நாளில் ரூ.7 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.