கம்பம்மெட்டு சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம்
கம்பம்மெட்டு சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில், பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக, தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லையான போடிமெட்டு, குமுளி, கம்பம்மெட்டு ஆகிய சோதனை சாவடிகளில் முகாம் அமைத்து கண்காணிக்குமாறு தேனி மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் சுப்பையா பாண்டியன் உத்தரவிட்டார். அதன்படி கம்பம்மெட்டு சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
முகாமில் க.புதுப்பட்டி கால்நடை மருந்தக மருத்துவர் காமேஷ் கண்ணன் தலைமையில் கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் கொண்ட குழுவினர் உள்ளனர். கேரளாவில் கால்நடைகள், கோழிகளை ஏற்றி, இறக்கி விட்டு திரும்பி வரும் வாகனங்களுக்கு மருந்து தெளிக்கப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் இருந்து கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக கேரளாவிற்கு பிராய்லர் கோழி, முட்டை மற்றும் கால்நடைகள் கொண்டு செல்லும் வாகனங்கள் தடையில்லாமல் சென்று வருகின்றன.
இதுகுறித்து கால்நடை மருத்துவர் கூறுகையில், தமிழகத்தில் பறவை காய்ச்சல் இல்லாததால் பிராய்லர் கோழி மற்றும் முட்டைகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பறவைகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.