ஈரோட்டில் ஓட்டல், பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை; காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்
ஈரோட்டில் ஓட்டல், பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனைநடத்தி காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோட்டில் ஓட்டல், பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனைநடத்தி காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
காலாவதியான காளான்
தமிழகத்தில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகளில் காலாவதியான உணவு பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா?, தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரிக்கின்றனரா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை ஆணையாளர் லால்வினா உத்தரவிட்டு உள்ளார்.
இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் செல்வன், அருண்குமார், எட்டிக்கன் ஆகியோர், ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட ஓட்டல், பேக்கரி, டீ கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஈரோடு குமலன்குட்டையில் உள்ள தனியார் உணவகத்தில் ஏற்கனவே சமைத்து குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 4 கிலோ சிக்கன், கிரில் சிக்கன், காலாவதியான 3 பாக்கெட் காளான் போன்றவற்றை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அழித்தனா்.
அபராதம்
மேலும், கடையில் சமைத்து வைக்கப்பட்டிருந்த சில உணவு வகைகள், குழம்புகளை சிறிதளவு பகுப்பாய்வுக்கு அனுப்ப எடுத்து சென்றனர். இதேபோல், பழையபாளையத்தில் உள்ள சைவ உணவகத்தில் இருந்த காலாவதியான காளானையும் அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
அதைத்தொடா்ந்து, டீக்கடைகள், பேக்கரிகளில் பழைய செய்தி பேப்பர்களில் வைக்கப்பட்டிருந்த பலகாரங்களையும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். டீக்கடை, பேக்கரிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தியதாக 10-க்கும் மேற்பட்ட உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், உணவகங்களின் உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு, மேல்நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த ஆய்வு மாவட்டத்தில் வருகிற 31-ந்தேதி நடைபெற உள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.