இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் விவசாயிகள் கணக்கு தொடங்க தபால் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் விவசாயிகள் கணக்கு தொடங்க தபால் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் விவசாயிகள் வங்கி கணக்கு தொடங்க தபால் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி தபால் கோட்ட கண்காணிப்பாளர் மு. பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வங்கி கணக்கு
மத்திய அரசின் 'பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி' திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள், இந்த மாதம் வழங்கப்பட உள்ள 14-வது தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிகணக்கு அவசியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால் காரர், கிராம தபால் ஊழியரை அணுகி ஆதாருடன் இணைக்கப்பட்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் 2.17 லட்சம் விவசாயிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 500 விவசாயிகளும் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல் இருப்பதாக தெரியவந்து உள்ளது. தூத்துக்குடி மாவட்ட வேளாண்துறையின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் அருகில் உள்ள தபால்காரர் மற்றும் கிராம தபால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், தங்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை மட்டும் பயன்படுத்தி கைவிரல்ரேகை பதிவு மூலம் ஒருசில நிமிடங்களில் ஆதாருடன் இணைக்கப்பட்ட இந்தியாபோஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம்.
சிறப்பு ஏற்பாடு
விவசாய மானியம் பெறும் பயனாளிகள் அனைவரும் இந்த வங்கிகணக்கு தொடங்க தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பயனாளிகள் அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர், கிராம தபால் ஊழியரை அணுகி இந்தியாபோஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிகணக்கு தொடங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.