கம்பம் புதிய பஸ் நிலையத்தில்பூட்டியே கிடக்கும் முன்பதிவு மையம்பயன்பாட்டுக்கு வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
கம்பம் புதிய பஸ் நிலையத்தில் பூட்டியே கிடக்கும் முன்பதிவு மையம் பயன்பாட்டுக்கு வருமா என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
கம்பத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, எர்ணாகுளம் ஆகிய நகரங்களுக்கு தமிழக அரசு சார்பில், விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக கம்பம் புதிய பஸ் நிலையத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம் உள்ளது. இங்கு சலுகை கட்டணத்தில் செல்லக் கூடிய மாற்றுத்திறனாளிகள் முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்று வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக முன்பதிவு மையம் பூட்டியே கிடப்பதால் மாற்றுத்திறனாளி பயணிகள் கம்பத்தில் இருந்து தேனிக்கு சென்று அங்கு முன்பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து மாற்றுத்திறனாளி பயணிகள் கூறும்போது, ஆன்லைன் வழியாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. ஆனால் இணையதளத்தில் சலுகை கட்டணத்தில் செல்வதற்கான வசதி இல்லாததால் முழு கட்டணமும் செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் கம்பம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தேனியில் உள்ள முன்பதிவு மையத்தில் பதிவு செய்கின்றனர். கம்பத்தில் இருந்து தேனிக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. எனவே கம்பம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.