தம்பதியிடம் கத்திமுனையில் ரூ.5 லட்சம் நகைகள், பணம் கொள்ளை


தம்பதியிடம் கத்திமுனையில்   ரூ.5 லட்சம் நகைகள், பணம் கொள்ளை
x

பேரணாம்பட்டு அருகே தம்பதியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 லட்சம் நகைகள், பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

வேலூர்

பேரணாம்பட்டு அருகே தம்பதியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 லட்சம் நகைகள், பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மண்பாண்ட தொழிலாளி

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த கீழ்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 54). மண்பாண்ட தொழிலாளி. இவரது மனைவி சுபா(50). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. ராஜேந்திரன்- சுபா தம்பதியினர் கீழ்ப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் மெயின் ரோட்டில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

ராஜேந்திரனுக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் ஓய்வு எடுத்து வருகிறார். நேற்று முன்தினம் இரவுவழக்கம் போல் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டை பூட்டி விட்டு சாவியை பூட்டின் மீது தொங்க விட்டு இருவரும் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

அதிகாலை 2.30 மணியளவில் சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க முகமூடி கொள்ளையர்கள் இரும்பு கேட்டை திறந்து உள்ளே வந்து கதவை தட்டினர். ராஜேந்திரன் தடுமாறி எழுந்து சென்று கதவை திறந்த போது முகமூடி அணிந்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி உள்ளே புகுந்தனர்.

அவர்கள் சுபாவின் கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின், கம்மல் ஆகியவற்றை பறித்ததோடு பீரோவை திறக்க செய்து அதிலிருந்த 10 பவுன் நகைகள் என மொத்தம் ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 13 பவுன் நகைகள் ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

தடயங்கள் சேகரிப்பு

மறுநாள் இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் மேல்பட்டி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருந்துகடை அதிபர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீடுகளில் ஏற்கனவே கொள்ளை சம்பவங்கள் நடந்த நிலையில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் முகமூடி கொள்ளையர் அட்டகாசம் பொதுமக்களை பீதியடைய வைத்துள்ளது.


Next Story