குதிரைமொழிபுங்கம்மாள்புரத்தில் பொதுப்பாதைஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
குதிரைமொழிபுங்கம்மாள்புரத்தில் பொதுப்பாதைஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
திருச்செந்தூர் அருகே குதிரைமொழி புங்கம்மாள்புரத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
பொதுப்பாதை ஆக்கிரமிப்பு
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருச்செந்தூர் தாலுகா குதிரைமொழி பஞ்சாயத்துக்கு உட்பட்ட புங்கம்மாள்புரம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் புங்கம்மாள்புரம் தெற்கு தெருவில் வசித்து வருகிறோம். எங்கள் தெருவில் 13 வீடுகள் உள்ளன. நாங்கள் கடந்த 150 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொது பாதையை ஒரு குடும்பத்தினர் அடைத்துவிட்டனர். இதனால் நாங்கள் பாதை இல்லாமல் தவித்து வருகிறோம். எங்களுக்கு நிரந்தர பாதை வசதி செய்து தர வேண்டும் என்று கூறி உள்ளனர்.
பாலம்
தூத்துக்குடி வழிவலை என்ற கில்நெட் மீனவர் விசைப்படகு உரிமையாளர் நலச்சங்கம் தலைவர் எம்.இசக்கிமுத்து தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தூத்துக்குடி திரேஸ்புரம் வடபகுதியில் சிறு தொழில் செய்யும் நாட்டுப் படகுகளுக்கு, ஆழ்கடல் தொழில் செய்யும் செவுள் வலை படகுகளால் பாதிப்பு ஏற்படாதவாறு முத்தரையர் நகர் பகுதியில் இரண்டு 'டி-ஜெட்டி' பாலம் சுமார் 250 மீட்டர் நீளத்துக்கு அமைத்து தர வேண்டும் என்று கூறி உள்ளனர்.
காங்கிரஸ் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் மச்சேந்திரன் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள அமலைச் செடிகள் அகற்றப்படாமல் உள்ளதால் மழை காலத்தில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து நீர்வரத்து கால்வாய்களிலும் உள்ள அமலைச் செடிகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
பொங்கல் போனஸ்
தூத்துக்குடி மாவட்ட எச்.எம்.எஸ் கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் பேரவை ராஜலட்சுமி மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தமிழ்நாட்டில் உள்ள கட்டுமான மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு பொங்கல் போனசாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் வழங்கும் திட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.