கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில்5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் 5 குழந்தை தொழிலாளர்களை தொழிலாளர் துறை அதிகாரிகள் மீட்டு நடவடிக்கை எடுத்தனர்.
கோவில்பட்டி பகுதி தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணியாற்றிய 5 குழந்தை தொழிலாளர்களை தொழிலாளர் துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
ஆய்வு
சென்னை தொழிலாளர் ஆணையரும், முதன்மை செயலாளருமான அதுல்ஆனந்த், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோரின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, போலீசார், சைல்டு லைன் மற்றும் தொழிலாளர் துறை ஆய்வாளர்கள் தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதிகளில் உள்ள கடைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகளில் கூட்டாய்வு நடத்தினர்.
மீட்பு
அப்போது தூத்துக்குடியில் 18 வயது பூர்த்தியடையாத 2 வளரிளம் பருவத் தொழிலாளர்கள், கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் 5 குழந்தை தொழிலாளர்கள், 2 வளரிளம் பருவத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். அவர்களை பணியமர்த்திய நிறுவன உரிமையாளர்கள் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986 மற்றம் அதன்படியான விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள், அவர்கள் ஏற்கனவே படித்த பள்ளிக்கூடங்களில் மீண்டும் சேர்ந்து கல்வியை தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எந்தவிதமான பணியிலும், 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியமர்த்தக் கூடாது. அவ்வாறு பணியமர்த்தினால் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமோ, 6 முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டுமோ சேர்த்து விதிக்கப்படும். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை யாரேனும் பணியமர்த்தி இருந்தால், அது குறித்த விவரத்தை குழந்தை பாதுகாப்பு உதவி எண் 1098 என்ற எண்ணிலோ அல்லது மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தை 0461-2340443 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.