கோவில்பட்டியில், 12-ந் தேதிதனியார் வேலை வாய்ப்பு முகாம்
கோவில்பட்டியில், 12-ந் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம், கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி ஆகியவை சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகிற 12-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. முகாமில் கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகள் வழங்குகின்றனர்.
முகாமில் தூத்துக்குடி மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுமார் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள், தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன்பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். இதில் 8-ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரி வரையிலும், மேலும் பி.இ, டிப்ளமோ, நர்சிங், ஐ.டி.ஐ. படித்தவர்களும் பங்கேற்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் தங்களது சுயவிவரம், கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகிய நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கு நேரில் வரவேண்டும். மேலும் www.tnprivatejobs.tn.gov.in என்ற தனியார்துறை வேலைவாய்ப்பு இணையத்திலும் தங்களது விபரங்களை பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களை Thoothukudi Employment office என்ற டெலகிராம் சேனலில் இணைந்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டு, தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டால் அவர்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படாது.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.