கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் காவேரி மருத்துவமனைஅவசர சிகிச்சை மையம் திறப்பு
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் காவேரி மருத்துவமனை அவசர சிகிச்சை மையம் திறக்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நெல்லை காவேரி மருத்துவ மனை சார்பில் ரெயில் பயணிகளுக்கான அவசர சிகிச்சை மைய தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர். வனசுந்தர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார். காவேரி மருத்துவமனை நிர்வாக மேலாளர் வைரமுத்து வரவேற்று பேசினார். விழாவில் தெற்கு ரெயில்வே டிவிஷனல் மேலாளர் ஆனந்த், டிவிஷனல் வர்த்தக மேலாளர் ரதி பிரியா, தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் பிரியா சௌந்தினி, சீனியர் டிவிசனல் மருத்துவ அதிகாரி டாக்டர் துரைராஜ், காவேரி மருத்துவமனை மெடிக்கல் நிர்வாகி டாக்டர் லட்சுமணன், ரெயில் நிலைய சூப்பிரண்டு பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த மையத்தில் ரெயில் பயணிகளுக்கு அவசர கால சிகிச்சை மற்றும் முதலுதவி சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவேரி மருத்துவமனை மேலாளர் கணேசன், மண்டல மார்க்கெட் டிங் மேலாளர் கார்த்திக் மற்றும் மருத்துவ ஊழியர்கள் செய்திருந்தனர்.