கும்பகோணத்தில், அனைத்து வசதிகளுடன் வாகனம் நிறுத்துமிடம் ஏற்படுத்தி தர வேண்டும்


கும்பகோணத்தில், அனைத்து வசதிகளுடன் வாகனம் நிறுத்துமிடம் ஏற்படுத்தி தர வேண்டும்
x

கும்பகோணத்தில், அனைத்து வசதிகளுடன் வாகனம் நிறுத்துமிடம் ஏற்படுத்தி தர வேண்டும்

தஞ்சாவூர்

திறந்த வெளியில் வாகனங்களை நிறுத்தும் அவலம் உள்ளதால் கும்பகோணத்தில் அனைத்து வசதிகளுடன் வாகனம் நிறுத்துமிடம் ஏற்படுத்தி தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மோட்டார்சைக்கிள்கள்

தஞ்சை மாவட்டத்தின் முக்கிய நகரமாக திகழும் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் வீடுகளில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்து கும்பகோணம் பகுதியில் உள்ள தனியார் நிறுத்துமிடத்தில் விட்டு விட்டு பஸ் மற்றும் ரெயில் மூலம் தாங்கள் வேலை பார்க்கும் இடங்களுக்கு சென்று வருகின்றனர். பொதுமக்களின் வாகனங்களை பாதுகாப்பதற்காக கும்பகோணம் பஸ் நிலையம் பகுதியில் ஒரு சில தனியார் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாகனங்கள் பழுது

இந்த வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்தி செல்ல போதிய இடவசதி, மழை வெயிலில் இருந்து வாகனங்களை பாதுகாக்க வேண்டிய மேற்கூரை போன்ற வசதிகள் இல்லாமல் உள்ளது. ஆனாலும் பொதுமக்கள் வேறுவழி இன்றி ஆங்காங்கே செயல்பட்டு வரும் தனியார் வாகன நிறுத்துமிடங்களில் தங்களது வாகனங்களை விட்டு செல்கின்றனர். சில நேரங்களில் தங்களது வாகனங்களை திறந்தவெளியில் நிறுத்தும் அவலம் உள்ளது. இதனால் வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. எனவே கும்பகோணத்தில் உரிய பாதுகாப்பு மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடத்தை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தி தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாகன நிறுத்துமிடம்

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

நான் சோழபுரம் அருகே உள்ள உள்ள மாவட்ட கல்வி அமைப்பில் வேலை பார்த்து வருகிறேன். அதிகாலையில் வீட்டிலிருந்து எனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு கும்பகோணம் வந்து இங்குள்ள ஒரு தனியார் வாகன நிறுத்துமிடத்தில் எனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தஞ்சையில் உள்ள கல்வி நிறுவன தலைமை அலுவலகத்திற்கு செல்வது வழக்கம். தினமும் வேலை முடிந்து இரவு 11 மணிக்கு மேல் வந்து எனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செல்வது வழக்கம்.

அவ்வப்போது மோட்டார் சைக்கிளில் காற்று குறைந்திருந்தாலோ அல்லது சக்கரத்தில் பஞ்சர் ஏற்பட்டிருந்தாலோ அவற்றை சரி செய்ய போதிய காற்று பம்பு, பஞ்சர் ஒட்ட தேவையான உபகரணம் போன்ற எந்த வசதிகளும் வாகன நிறுத்துமிடத்தில் இருப்பது இல்லை. இரவு நேரம் என்பதால் மோட்டார் சைக்கிளை பழுதுபார்க்கும் ஒர்க் ஷாப்பில் அடைத்து விடுவதால் வேறு எங்கும் கொண்டு சென்றும் பழுதான வாகனங்களை சரி செய்து வீட்டிற்கு திரும்ப முடிவதில்லை. எனவே அனைத்து வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடத்தை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story