கம்பத்தில் நள்ளிரவில் மெத்தை கடையில் பயங்கர தீ விபத்து
கம்பத்தில் நள்ளிரவில் மெத்தை கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
கம்பம் புலவர் தெருவை சேர்ந்தவர் முகமது ஆசிக் (வயது 29). இவர் புதிய பஸ் நிலையம் அருகே மெத்தை கடை மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். நேற்று இரவு இவர், கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் நள்ளிரவில் அவரது கடையில் இருந்து கரும்புகை வெளியானது. பின்னர் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் கம்பம் வடக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து முகமது ஆசிக்கும் அங்கு வந்தாா். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் கடையில் இருந்த தலையணை, மெத்தை உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. மேலும் செல்போன் உதிரி பாகங்களும் தீயில் எரிந்து கருகின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் மெத்தை கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அங்கு பரபரப்ைப ஏற்படுத்தியது.