நாகை தோணித்துறையில், கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே மேம்பால பணி


நாகை தோணித்துறையில், கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே மேம்பால பணி
x

நாகை தோணித்துறையில், கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே மேம்பால பணி

நாகப்பட்டினம்

ரூ.101 கோடி நிதி ஒதுக்கியும் நாகை தோணித்துறையில் கிடப்பில் போடப்பட்டுள்ள ெரயில்வே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெயில்வே மேம்பாலம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் ஆகிய ஆன்மிக தலங்கள் அமைந்துள்ளன. இதனால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாகைக்கு வந்த வண்ணம் உள்ளனர். நாகையில் இருந்து வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும், பழைய பஸ் நிலையத்தில் இருந்து தோணித்துறை ரோடு, அக்கரைப்பேட்டை, தெற்கு பொய்கைநல்லூர் வழியாகவும் வேளாங்கண்ணிக்கு செல்லலாம்.

நாகை தோணித்துறை சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் ஏற்றி செல்லும் வாகனங்கள், அதனை சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் மற்றும் வேளாங்கண்ணிக்கு செல்பவர்கள் என அனைவரும் இந்த ரெயில்வே கேட்டை தாண்டி தான் செல்ல வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்

ரெயில்கள் செல்லும் போது தோணித்துறை ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படும். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு ரெயில்வே துறை சார்பில் ரெயில்வேகேட் பகுதியில் மட்டும் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதி பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் பாலம் கட்ட வேண்டும். ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நெடுஞ்சாலை துறை சார்பில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ரெயில்வே கேட் பூட்டி இருக்கும் போது நீண்ட நேரம் காத்திருப்பவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களுடன் கேட்டுக்குள் புகுந்து ஆபத்தை உணராமல் செல்கின்றனர்.

நிதி எங்கே சென்றது

இதுகுறித்து நாகை இந்திய வர்த்தக தொழில் குழும தலைவர் சலிமுதீன் கூறுகையில், தோணித்துறையில் ரெயில்வே மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஒதுக்கப்பட்ட நிதியும் எங்கே சென்றது என தெரியவில்லை. இந்த சாலை வழியாக தான் மீனவர்கள் கடலில் பிடித்து வரப்படும் மீன்களை வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக ஒரு நாளைக்கு 16 முறை சரக்கு ரெயில் செல்கிறது. அப்போது அரை மணி நேரத்துக்கும் மேலாக ரெயில்வே கேட் மூடப்படுகிறது.

இதனால் சரக்கு ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் நாகை பழைய பஸ் நிலையம் மற்றும் முதலாவது கடற்கரை சாலையில் வரிசையாக காத்து கிடக்கின்றன. இது தவிர அரவைக்காக வேகன்களில் நெல் மூட்டைகளை ஏற்றும் லாரிகளும் வரிசையாக நின்று போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்கிறது. இது குறித்து நாகை வந்த சட்டமன்ற குழுவினரிடம் தெரிவித்து உள்ளோம். இந்த மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படும் என நம்புகிறோம். அரசு நாகை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக தோணித்துறை ரெயில்வே மேம்பால பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என்றார்.

விரைந்து முடிக்க வேண்டும்

இதுகுறித்து நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு-பயணிகள் சங்க செயலாளர் அரவிந்த்குமார் கூறுகையில்,

தோணித்துறை ரெயில்வே மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் நாள்தோறும் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை, மாலை நேரத்தில் பள்ளி செல்லும் மாணவ மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ெரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்போது ஆம்புலன்சு கூட அந்த பகுதியை கடந்து செல்ல முடியாமல் திணறி வருகிறது. இதனால் ஏதேனும் உயிரிழப்பு சம்பவங்கள் நிகழாத வண்ணம் நாகை தோணித்துறை ெரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story