தூத்துக்குடியில் இரவு நேரத்தில்சைக்கிளில் சென்று போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
தூத்துக்குடியில் இரவு நேரத்தில் சைக்கிளில் சென்று போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு நடத்தினார்.
தூத்துக்குடியில் இரவு நேரத்தில் சைக்கிளில் சென்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இரவு ரோந்து பணியின் போது போலீசார் வழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
சைக்கிளில் ரோந்து
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் குறித்தும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் குறித்தும் மற்றும் வாகன சோதனைகள் மேற்கொள்ள அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் ரோந்து பணிக்காக தனியாக கார்கள் வழங்கப்பட்டன. இதில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் முக்கிய வீதிகளில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். ஆனால் சமீபகாலமாக இந்த ரோந்து வாகனங்களை போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதனால் ரோந்து செல்லாமல் வாகனங்கள் ஓரிடத்தில் ஓய்வு எடுப்பதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
போலீசாருக்கு அறிவுறுத்தல்
இந்த நிலையில் போலீசாரின் ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அவர் முகாம் அலுவலகத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு சைக்கிளில் ஆய்வு பணிக்காக புறப்பட்டார். அவர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், ரோச் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். அப்போது போலீசாருக்கு இரவு ரோந்து பணியில் விழிப்பாக செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். மேலும் மத்தியபாகம் போலீஸ் நிலையத்துக்கு சென்று பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்களையும் ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.