தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் 53 அடி உயர தங்கத்தேர் வடிவமைக்கும் பணி தொடங்கியது


தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் 53 அடி உயர தங்கத்தேர் வடிவமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 53 அடி உயர தங்கத்தேர் வடிவமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. வருகிற ஆகஸ்டு 5-ந் தேதி தேர்பவனி நடக்கிறது.

பனிமய மாதா பேராலயம்

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் முக்கிய நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில், அந்த ஆண்டுகளில் தங்கத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி இதுவரை 15 முறை தங்கத்தேர் பவனி நடந்து உள்ளது. முதல் முறையாக 2.2.1806-ல் தூய பனிமய மாதா சொரூபம் தூத்துக்குடிக்கு வந்ததன் 250-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது. கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு பனிமய மாதா பெயரில் புதிய ஆலயம் கட்டப்பட்டதன் 300-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஆண்டு (2023) தங்கத்தேர் பவனி நடைபெறும் என்று பிஷப் ஸ்டீபன் அந்தோணி அறிவித்தார்.

தங்கத்தேர்

இதனை தொடர்ந்து தங்கத்தேர் வடிவமைப்புக்கான பணிகள் கடந்த வாரம் தொடங்கின. இதற்காக பேராலய வளாகத்தில் பிரமாண்டமான ஷெட் அமைக்கும் பணிகள் நடந்தன. இதற்காக பனைமரங்கள் முழுமையாக கொண்டு வரப்பட்டு ராட்சத கிரேன்கள் மூலம் நடப்பட்டன. நேற்று காலையில் தேர் பிறையில் இருந்து தேர் வெளியே கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை பங்கு தந்தை குமார்ராஜா பிரார்த்தனை நடத்தி தொடங்கி வைத்தார். தொடர்ந்து தேர் வடிவமைப்பு மற்றும் அலங்கரிப்பதற்காக குருசு கோவிலில் இருந்து பனிமயமாதா ஆலயம் அருகே அமைக்கப்பட்டு இருந்த கூடத்துக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். பின்னர் தேர் பிரமாண்ட பனிமணை பகுதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கும் பணி தொடங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

53 அடி உயரம்

இது குறித்து பங்கு தந்தை குமார்ராஜா கூறும் போது, தூத்துக்குடி மறைமாவட்டம் நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஆண்டு பனிமயமாதா ஆலய தங்கத் தேர் பவனி நடக்கிறது. அதற்கு ஆயத்தமாக தேர்பிறையில் இருந்து ஆலயவளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள கூடத்துக்கு தங்கத் தேர் கொண்டு வரப்பட்டு உள்ளது. அடுத்த 10 மாதங்கள் இந்த பணி நடைபெறும். அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி 16-வது முறையாக தங்கத்தேர் பவனி நடைபெற உள்ளது. 53 மணி ஜெபமாலையை வைத்து கத்தோலிக்கர்கள் ஜெபிக்கிறார்கள். அதனை குறிக்கும் வகையில் 53 அடி உயரம் கொண்டதாக தங்கத் தேர் அமைக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு விழாவுக்கான பல ஆயத்த பணிகள் தற்போது இருந்தே தொடங்கி நடைபெறும் என்று கூறினார்.


Next Story