பெருந்தலையூர் மகிழீஸ்வரர் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை மூட்டையாக கட்டிய கொள்ளையர்கள்


பெருந்தலையூர் மகிழீஸ்வரர் கோவிலில்  உண்டியலை உடைத்து பணத்தை மூட்டையாக கட்டிய கொள்ளையர்கள்
x

பெருந்தலையூர் மகிழீஸ்வரர் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை மூட்டையாக கட்டிய கொள்ளையர்கள் போலீஸ் சைரன் ஒலித்ததால் தப்பி ஓடிவிட்டனர்.

ஈரோடு

கவுந்தப்பாடி

பெருந்தலையூர் மகிழீஸ்வரர் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்ைத மூட்டையாக கட்டிய கொள்ளையர்கள் போலீஸ் சைரன் ஒலித்ததால் தப்பி ஓடிவிட்டனர்.

மகிழீஸ்வரர் கோவில்

கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூரில் பழமையான மகிழீஸ்வரர் கோவில் உள்ளது. பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்தக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பெருந்தலையூர், கவுந்தப்பாடியை சேர்ந்த பக்தர்கள் தினமும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கடந்த 30 ஆண்டுகளாக பெருந்தலையூரை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 55) என்பவர் கோவிலில் அர்ச்சகராக உள்ளார்.

கடந்த 21-ந் தேதி இரவு பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் காலை 6.15 மணி அளவில் மீண்டும் கோவிலை திறந்து உள்ளே சென்றார்.

மூட்டைக்குள் பணம்

அப்போது மகிழீஸ்வரர் கோவில் உண்டியலும், அருகே உள்ள பிரஹன்நாயகி சன்னதியில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு இருந்தது. அதைப்பார்த்து பதறிப்போன சண்முகசுந்தரம் உடனடியாக கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ், சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளியங்கிரி ஆகியோர் கோவிலுக்கு விரைந்து வந்து பார்த்தார்கள். அப்போது உண்டியலின் அருகிலேயே 2 துணி மூட்டைகள் கிடந்தன. அதை பிரித்து பார்த்தபோது உண்டியலில் திருடப்பட்ட பணம் அதில் இருந்தது.

தொடர் கொள்ளை

யாரோ மர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து பணத்தை துணியில் மூட்டையாக கட்டியுள்ளார்கள். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் சைரனை ஒலிக்கவிட்டபடி சென்றுள்ளார்கள். அதைக்கேட்டு பயந்துபோன கொள்ளையர்கள் பண மூட்டையுடன் வெளியே சென்றால் போலீசில் சிக்கிவிடுவோம் என பயந்து, மூட்டையை கோவிலுக்குள்ளேயே போட்டுவிட்டு சென்றது தெரிய வந்தது. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் உண்டியல் பணம் தப்பியது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கோவிலில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடியது. பின்னர் நின்றுவிட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோவில்களில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளார்கள்.


Next Story