போலீஸ் நிலையங்களில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை ஏலம் விட முடிவு
தேனி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
தேனி, போடி, உத்தமபாளையம், பெரியகுளம் ஆண்டிப்பட்டி ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 21 போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட 504 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 கார்கள் கேட்பாரற்று நிற்கின்றன.
இந்த வாகனங்களை அதன் உரிமையாளர்கள் இதுவரை உரிமை கோரி வரவில்லை. இதுதொடர்பான மேல்நடவடிக்கைக்காக அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட தாசில்தார்களுக்கு போலீஸ் நிலையத்தில் இருந்து அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வாகனங்களை யாரும் உரிமைகோராதபட்சத்தில் அவற்றை ஏலம் விட தாசில்தார்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்த அறிவிப்பு போலீஸ் நிலையங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாவட்ட போலீஸ் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளன. எனவே, வாகன உரிமையாளர்கள் இதனை பார்வையிட்டு தங்கள் வாகனங்கள் எதுவும் அந்த பட்டியலில் இருந்தால் உரிய ஆவணங்களை தாசில்தாரிடம் காண்பித்து வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு யாரும் உரிமைகோரவில்லை என்றால் அந்த வாகனங்கள் அரசுடமையாக்கப்பட்டு ஏலம் விடப்படும். இத்தகவலை போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.