தபால் அலுவலகங்களில்சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு முகாம்
தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு முகாம் இன்று தொடங்குகிறது.
தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மத்திய அரசு தபால் அலுவலகங்களில் உள்ள சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் அதிகரித்துள்ளது. இந்த பயன்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களிலும் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.
அதன்படி தேனி தபால் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் இன்று முதல் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. சேமிப்பு கணக்கு தொடங்கியவுடன் ஏ.டி.எம். கார்டு, எஸ்.எம்.எஸ். பேங்கிங், இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் மின்னணு சேவைகள் உடனடியாக வழங்கப்படும். அஞ்சலக சேமிப்பு கணக்கில் இருந்து பிற வங்கிகளுக்கும், பிற வங்கிகளில் இருந்து சேமிப்பு கணக்கிற்கும் பரிவர்த்தனை செய்ய முடியும். தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.