தபால் அலுவலகங்களில் சிறப்பு தூய்மை இயக்கம்
தேனி தபால் கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் சிறப்பு தூய்மை இயக்கம் நடந்தது.
தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய தபால் துறை சார்பில், தேனி தபால் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் கடந்த மாதம் 2-ந்தேதி முதல் நேற்று வரை சிறப்பு தூய்மை இயக்கம் நடந்தது. இதில் தேனி பகுதியாக உத்தமபாளையம் துணை தபால் அலுவலகத்தை கணிசமான உருவாக்கத்திற்காக தேர்வு செய்து, பழைய பதிவுகள், கோப்புகள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், தபால் அலுவலகங்களில் வெள்ளை அடித்தும், மரப்பொருட்கள், மின்உபயோக பொருட்கள் பழுது பார்த்தும் சீர்செய்யப்பட்டன.
தபால் அலுவலக சுவர்களில் தூய்மை விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு, விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டன. இந்த தூய்மை பணியின் மூலம், பழைய கோப்புகள், பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் ஏற்பட்டுள்ள கூடுதல் இடவசதியானது வாடிக்கையாளர்கள் பயன்பாட்டுக்கும், ஆதார் முகாம்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து தபால் அலுவலகங்களை தூய்மையாக பராமரிக்க அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.