பொட்டல்புதூர் கந்தூரி விழாவில் தீப அலங்காரம்
பொட்டல்புதூர் கந்தூரி விழாவில் தீப அலங்காரம் நிகழ்ச்சி நடந்தது.
கடையம்:
பொட்டல்புதூரில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 4-ம் தேதி பச்சைகளை ஊர்வலம், 5-ந் தேதி அரண்மனை கொடி ஊர்வலம் வந்து கொடியேற்றம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மேலூர் ஜமாத்தின் பத்தாம் இரவு கொடி ஊர்வலம் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து சந்தனக்கூடு ஊர்வலம் ரவணசமுத்திரத்தில் இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலையில் பள்ளிவாசல் வந்தடைந்தது. இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் மெழுகினார்.
நேற்று மாலை 6 மணிக்கு தீப அலங்கார திடலில் தீப அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு விளக்கில் எண்ணெய் ஊற்றினார்கள். நாளை (செவ்வாய்க்கிழமை) ராத்திபுஓதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இனாம்தார் எஸ்.பி.ஷா, வக்கீல் முகமது ரபி, முகமது சலீம் மற்றும் பள்ளிவாசல் மேனேஜிங் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.