ராஜபாளையத்தில், விநாயகர் சிலைகள் ஊர்வலம்
ராஜபாளையத்தில், விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
ராஜபாளையம்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜபாளையம் நகர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பஞ்சு மார்க்கெட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.இதில் இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, நகரத்தலைவர் சஞ்சீவி, துணைத்தலைவர் முத்துமாணிக்கம் உள்பட இந்து முன்னணி நிர்வாகிகளும், ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத், பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். அதை தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் அங்கிருந்து தொடங்கியது. பழைய பஸ் நிலையம், காந்தி சிலை ரவுண்டானா வழியாக சென்று சங்கரன்கோவில் சாலையில் உள்ள கருங்குளத்தில் கரைக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சூரியமுத்து, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பீர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் சபரிநாதன், சாத்தூர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.