ராமேசுவரத்தில், கிரிக்கெட் போட்டி தொடங்கியது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராமேசுவரத்தில், கிரிக்கெட் போட்டி தொடங்கியது.
ராமேசுவரம்,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. சார்பில் ராமேசுவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கு பெறும் கிரிக்கெட் போட்டியானது நேற்று முதல் தொடங்கியது. வருகின்ற 18-ந்தேதி வரை நடைபெறுகின்றது. முதல் நாள் போட்டியில் பாம்பன் அணியும் ராமேசுவரம் சுடுகாட்டம்பட்டி அணியும் மோதின. இந்த முதல் போட்டியை ராமேசுவரம் நகர சபை சேர்மன் நாசர்கான் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி கவுன்சிலர்கள் முகேஷ்குமார், ஜெ.ஆர்.எம்.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 3 போட்டிகள் நடைபெற்றன. அதுபோல் இன்று 4 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது வருகின்ற 18-ந்தேதி அன்று மாலை 3 மணிக்கு இதே மைதானத்தில் நடைபெறுகின்றது. போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரம் பரிசு தொகையும் 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசு தொகையும், மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 ஆயிரம் பரிசு தொகையும் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் வழங்குகிறார்.