ராணிமகாராஜபுரத்தில்சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம்


தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராணிமகாராஜபுரத்தில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

ராணிமகாராஜபுரத்தில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.

விழிப்புணர்வு முகாம்

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் திருச்செந்தூர் அருகிலுள்ள ராணிமகாராஜபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு, கால்நடை துறை உதவி இயக்குனர் செல்வகுமார் தலைமை தாங்கினார். முகாமை திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் தொடங்கி வைத்தார். முகாமில் தற்காலிக மலட்டு தன்மை நீக்குதல், குடல்புழு நீக்கல், சுண்டு வாத அறுவை சிகிச்சை, ஆண்மை நீக்கம் செய்தல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்த முகாமில் ஆறுமுகநேரி உதவி கால்நடை மருத்துவர் பர்கத்துல்லா தலைமையிலான மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும், முகாமிற்கு கொண்டு வரமுடியாத கால்நடைகளுக்கு அந்தந்த பகுதிகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மொத்தம் 80 மாடுகள், 125 ஆடுகள், 150 கோழிகள், 10 நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாமில், திருச்செந்தூர் நகர தி.மு.க. செயலாளர் வாள் சுடலை, நகர துணை செயலாளர் மகாராஜன், வக்கீல் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்

இதேபோன்று, திருச்செந்தூர் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழக சமூக பாதுகாப்பு துறைக்கு உட்பட்ட மாவட்ட பெண் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆகியவை இணைந்து உலக பெண் குழந்தைகள் தின விழாவை கொண்டாடின. விழாவிற்கு, நகராட்சி தலைவர் சிவஆனந்தி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கங்காகவுரி, நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், ஆணையர் கண்மணி, மேலாண்மைக்குழு மற்றும் நகராட்சி உறுப்பினருமான கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் விமலா வரவேற்று பேசினார். பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், அலுவலர் ஜேம்ஸ் அதிசய ராஜா ஆகியோர் பேசினர்.

பின்னர், பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை நகராட்சி தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் பள்ளியிலிருந்து புறப்பட்டு, நான்கு ரதவீதிகள் சுற்றி மீண்டும் பள்ளியை வந்து சேர்ந்தது.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்லபாண்டியன், மாவட்ட பெண் குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் செல்வி பிளாரன்ஸ், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் முத்துலெட்சுமி, அம்மணி பூங்கொடி, மாவட்ட அறங்காவலர் வாள்சுடலை, மகராசன் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாள்கள் கலந்து கொண்டனர். தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் வீரராஜலெட்சுமி நன்றி கூறினார்.


Next Story