ரெட்டிப்பட்டி, இரும்பாலை, சின்னபிள்ளையூரில்பொங்கல் பண்டிகையையொட்டி களைகட்டிய எருதாட்டம்


ரெட்டிப்பட்டி, இரும்பாலை, சின்னபிள்ளையூரில்பொங்கல் பண்டிகையையொட்டி களைகட்டிய எருதாட்டம்
x

ரெட்டிப்பட்டி, இரும்பாலை, சின்னபிள்ளையூரில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டம் களை கட்டியது.

சேலம்

ஓமலூர்,

ரெட்டிப்பட்டியில் எருதாட்டம்

ஓமலூரை அடுத்த பெரியேரிப்பட்டி ஊராட்சி ரெட்டிபட்டியில் பொடாரியம்மன் கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி, எருதாட்டம் நேற்று மாலை நடந்தது. முதலில் கோவில் முன்பு எருதுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கழுத்தில் கயிறு கட்டி பொடாரியம்மன் முன்பு நிறுத்தி சாமி கும்பிட்டு எருதாட்டம் தொடங்கப்பட்டது.

அதன்பிறகு ஒன்றன்பின் ஒன்றாக 50-க்கும் மேற்பட்ட எருதுகளை கோவில் வளாகத்தில் கொண்டு வந்து கயிறுகட்டி உறிகாட்டி எருதாட்டினர். இதில் ரெட்டிபட்டி, பெரியேரிப்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி உள்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து வீடுகளின் மீதும், சுவர்களின் மீதும் ஏறி நின்று எருதாட்டத்தை பார்த்து கண்டுகளித்தனர்.

இரும்பாலை

இரும்பாலை மெயின் கேட் அடுத்து எம்.ஜி.ஆர். நகரில் உள்ள மூங்கில் குத்து காளியம்மன் கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்ட நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதற்காக இரும்பாலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது மாடுகளுக்கு வர்ணம் பூசி அலங்காரம் செய்து கோவில் பகுதிக்கு அழைத்து வந்தனர்.

இதையொட்டி மூங்கில் குத்து காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முதலில் கோவில் மாடு அழைத்து வந்து கோவிலை மூன்று முறை சுற்றி அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ஒவ்வொரு மாட்டையும் அதன் உரிமையாளர்கள் கோவிலை மூன்று முறை சுற்றி வலம் வர செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, மாடு பிடி வீரர்கள் எருதாட்டத்தில் பங்கேற்ற மாட்டின் முன்பு பொம்மையை வைத்து ஆட்டம் காண்பித்தனர், அப்போது மாடுகள் அங்கும் இங்குமாக ஆக்ரோஷமாக ஓடியது. இந்த எருதாட்டத்தை சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர். இரும்பாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சின்னபிள்ளையூர்

சின்னப்பம்பட்டி அருகே உள்ள சின்ன பிள்ளையூர் விநாயகர் கோவிலில் பொங்கல் பண்டிகையொட்டி எருதாட்டம் நடந்தது. விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட எருதுகளை இளைஞர்கள் உற்சாகமாக பிடித்து கொண்டு கோவிலை சுற்றி ஓடினார்கள்.

இந்த எருதாட்ட நிகழ்ச்சியை காண, சின்ன பிள்ளையூர், பனஞ்சாரி, கசப்பேரி, கொண்டகாரனூர், மடத்தூர், சின்னப்பம்பட்டி, மேட்டுக்காடு, சூரன்வளவு உள்பட சுற்று வட்டார பகுதி கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.


Next Story