ரிஷிவந்தியம் அரசு கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் கூடுதல் பேராசிரியர்களை நியமிக்க கோரிக்கை


ரிஷிவந்தியம் அரசு கல்லூரியில்  வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்  கூடுதல் பேராசிரியர்களை நியமிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதல் பேராசிரியர்களை நியமிக்கக்கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 3 ஆண்டுகளாக அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரியில் போதிய இடவசதி இல்லாததால், பகுதி வாரியாக கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மதியமும், 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு காலையிலும் வகுப்புகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில் கல்லூரியில் 4 பேராசிரியர்கள் மட்டுமே அனைத்து மாணவர்களுக்கும் பாடம் எடுப்பதால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படும் நிலை உள்ளது.

போராட்டம்

இந்த நிலையில் கல்லூரியில் போதிய ஆசிரியர்களை நியமிக்கக்கோரியும், கல்லூரிக்கு உடனடியாக நிரந்தர கட்டிடம் கட்ட கோரியும் நேற்று காலை 11 மணியளவில் மாணவ-மாணவிகள் தங்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆனால் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால், மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கல்லூரி முதல்வர் ரேவதியிடம் தங்கள் கோரிக்கையை மனுவாக கொடுத்து விட்டு வகுப்பறைக்கு திரும்பினர். இதனால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story